கண்ணே கலை மானேயென்று கவிதை பாடும்
கூட்டமதை நீ நம்பிவிடாதே!
கருவறையிலே உன்னை சமாதியாக்கும்
கூட்டம் இங்கு உண்டென்பதை மறந்துவிடாதே!
கங்கா காவிரி யமுமையென பெயரிடும்
கூட்டமதை நீ நம்பி விடாதே!
கௌரவக்கொலை, ஆணவக்கொலை, சிசுக்கொலையெனப்
பட்டியல்கள் பலவுண்டு நீ மறந்துவிடாதே!
சரஸ்வதி பார்வதி லட்சுமியென உனை
தெய்வமாக்குவதை நீ நம்பிவிடாதே!
திரையிலும் விளம்பரங்களிலும் உன்னைக் காட்சிப் பொருளாக்கி
காசு பார்க்கும் கூட்டம் உண்டு மறந்து விடாதே!
பொன்னே தங்கமே வைரமேயென உனை
போற்றுவதை நீ நம்பிவிடாதே!
நீ சமைக்கும் போது மட்டும் தான்
ஸ்டோவ் வெடிக்கும் என்பதை மறந்துவிடாதே!
ஆணும் பெண்ணும் சரிநிகர் என்பர் ஆனால்
நிர்பயாவும் நிதர்சனாவும் இங்கு பலருண்டு மறந்துவிடாதே!
பாலே,தேனே,மணியேயென்று மழலையரைக் கொஞ்சும்
கூட்டமதை நீ நம்பிவிடாதே!
பால்மணம் மாறா பிஞ்சுகளை நசுக்கும்
நச்சுப்பாம்பும் இங்கு உண்டு மறந்துவிடாதே!
ஐயோ! பெண்ணாகப் பிறந்தால் எத்தனை சிக்கல்கள்
இந்த வையகத்தில் என்று நீ மருண்டுவிடாதே!
நமக்கு முன் சாதித்த பெண்மணிகள் தான்
எத்தனை எத்தனை பேர் எண்ணிப்பார்!
ஆற்றலுடன் அவர்தம் பாதையில் நடை போடு
அனத்துயிரும் உன்னைப் போற்றிடும் மறந்துவிடாதே!

Comments
Post a Comment