அவலம் யானைக்கு கிடைத்திட்ட அனுதாபம் எனக்கு கிடைக்காத அவலம் கேளீர்! கொரோனா வைரஸ் தீண்டிய எனை தீண்டத்தகாதவன் என தள்ளிவைத்த உறவுகளின் அவலம்! இருவாரம் சிகிச்சை முடிந்து வந்த எனை இல்லாளும் இல்லத்தில் சேர்க்காத அவலம்! பெற்றெடுத்த பிள்ளைகள் எனைத் துரத்திவிட வெறுமையுற்று இன்னுயிரை மாய்த்து கொண்ட அவலம்! புதுசிசுவை உலகிற்கு ஈந்த மகிழ்விலிருந்த எனை பொடிநடையாய் வீடு போய் சேரென பாதிவழியில் இறக்கி விட்டுச் சென்ற அவசர ஊர்தியின் அவசரம் அவலம்! உயிர் வாழ புலம்பெயர்ந்து வேலை செய்த நான் உயிர் பிழைக்க சொந்த மண்ணை நாடி நடந்த அவலம்! இரவினில் இரயில் தண்டவாளங்களே என் தலையணை இரத்த களரியாய் அதிகாலையில் எனை கண்ட அவலம்! உணவின்றி உறக்கமின்றி கால்கள் தேய நடந்து ஊர் எல்லையை தொடுமுன் உயிர் துறந்த அவலம்! தூரத்து மாநிலத்துக்கு படிக்க சென்ற மகனை உயிரற்ற உடலாகக் கண்ட பெற்றோரின் அவலம்! என்னுயிரைத் துச்சமென மதித்து மன்னுயிரைக் காத்திட மருத்துவம் செய்த எனை அமரனான பின்னும் அமைதியில் கலந்திட இடுகாடோ, சுடுகாடோ தர...